;
Athirady Tamil News

இலக்கை மறந்த தமிழர் அரசியல் !! (கட்டுரை)

0

முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில், தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அது, தமிழ் மக்களின் அரசியல், விடுதலை எனும் இலக்கை மறந்து நின்று, அன்றாடம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பது மாத்திரமே அரசியல் எனும் கட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இன்றைய கட்சிகள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி, தற்போது புதிது புதிதாக முளைக்கும் எந்தத் தமிழ்க் கட்சியும் கூட, இப்படியான இயங்குநிலையையே கொண்டிருக்கின்றன.

நிகழ்வுகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு பிரதிபலிக்கும் அரசியல் என்பது பெரிய உழைப்பை கோருவதில்லை. கண்டன அறிக்கை, ஊடக சந்திப்பு அல்லது சில மணிநேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்கிற அளவில், இந்த அரசியலை குறுக்கிக் கொண்டுவிடலாம்.

மற்றப்படி, மூளைக்கு பெரிய வேலையையோ, நாளாந்தம் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைப் முன்னெடுக்கும் செயற்பாடுகளையோ செய்யத் தேவையில்லை.

விடுதலை அரசியல் குறித்த சிந்தனை இருக்கும் எந்தவொரு தரப்பும் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதுதான், மக்கள் விடுதலை குறித்துச் சிந்திக்கின்ற எந்தவொரு மனிதனும் தலைவனாகவும், வழிகாட்டியாகவும் மாறுவதற்கான வழியாகும்.

தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் என்கிற ஓரிரு தலைவர்களைத் தவிர்த்தால், தமிழர் அரசியலில் அர்ப்பணிப்பு குறித்த சிந்தனையோடு இருந்த தலைவர்கள் என்று அடையாளப்படுத்திக் கூறும் அளவுக்கு யாரும் இல்லை.

தேர்தல் வெற்றியும், அதன் மூலமான பதவிகளையும் குறிவைத்தே தமிழ்த் தேசிய அரசியலை பெருமளவு காலமும் தமிழ்க் கட்சிகள் நகர்த்தி வந்திருக்கின்றன. ஆட்சி அதிகாரம் என்கிற நிலையை அடைவது குறித்து, தமிழ்த் தேசிய கட்சிகள் சிந்திக்காவிட்டாலும், தமிழர் தாயகத்தில் தாங்களே தீர்மானம் எடுக்கும் சக்திகள் எனும் நிலையைப் பேணுவதன் மூலம், சில சலுகைகளை உள்நாட்டுத் தரப்புகள் மற்றும் வெளித் தரப்புகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பது, தமிழ்த் தேசிய கட்சிகள் பெரும்பாலானவற்றின் தலைவர்களின் எண்ணமாக காணப்படுகின்றது. அந்த எண்ணப்பாடுதான், ஒவ்வொரு கட்சியையும் பல கூறுகளாகப் பிளந்து வைத்திருக்கின்றது.

இன்றைக்கு தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும், பிராந்திய வல்லரசு தொடங்கி மேற்கு நாடுகள், சீனா வரையில் தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொள்ள நினைக்கின்றன. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தனக்கு இணக்கமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை, தங்களது நிகழ்ச்சி நிரலை நிகழ்த்துவதற்கான முகவர்களாக வைத்துக் கொள்கின்றன.

அதனால், அவர்கள் கட்சி நலன், தமிழ் மக்களுக்கான அரசியல் என்று அனைத்தையும் மறந்துவிட்டு, செயற்படுகின்றனர். அதையே, தங்களை பின்தொடரும் கட்சி ஆதரவாளர்களிடமும் விதைக்கின்றனர். இதனால், தமிழ் மக்களை மதவாத, சாதியவாத அடிப்படையிலும் பிரதேச வாதத்தாலும் பிளவுபடுத்தும் வேலைகளைச் செய்கின்றனர். இவை, தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழ்நோக்கி தள்ளும் செயற்பாடுகளாகும்.

தமிழர் தாயகம் எங்கும் புத்தர் சிலைகளை வைத்தும், விகாரைகளைக் கட்டியும் சிங்கள பௌத்தம், ஆக்கிரமிப்பு அரசியலை செய்து வருகின்றது. அதற்கு எதிராக மூர்க்கமாகப் போராடுவதை விடுத்து, தமிழர் பரப்புக்குள் சிவன் சிலை, சிவலிங்கம் அமைப்பு என்று வீதிகளை ஆக்கிரமித்து, மத நல்லிணக்கத்துடன் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வுகளின் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதும், இந்துத்துவா அடிப்படைவாத சிந்தனையை தமிழ் மக்களுக்குள் விதைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்தூதும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

ஓர் ஆலயத்தையோ, வழிபாட்டிடத்தையோ அமைப்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் மனிதம் செய்யக் கூடிய ஒன்று! அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது. ஆனால், பொதுவான இடத்தில், திடீர் திடீரென சிலைகளை அமைத்து, அதை வழிபாட்டிடமாக மாற்ற முயல்வது என்பது, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு. அவ்வாறான செயற்பாடுகளின் பின்னணி தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியிருக்கிறது.

இப்படியான கட்டங்களில், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சிகள், அவற்றைக் கவனமாக கையாள நினைக்க வேண்டும். ஆனால், அதனை மறந்து நின்று, பிளவுகளுக்குத் துணைபோவது என்பது, வரலாற்று துரோகத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதாகும்.

இன்னொரு பக்கம், மேற்கு நாடுகளின் நிதியுதவியோடு வரும் கிறிஸ்தவ அமைப்புகளும் தமிழ் மக்களிடம் காணப்படும் மதநல்லிணக்கம் எனும் நிலையை சீரழிக்கும் வேலைகளைச் செய்கின்றன. புதிது புதிதாக வரும் கிறிஸ்தவ சபைகள், ஏழை எளிய மக்களைக் குறிவைத்து பிரித்தாளும் அரசியலை செய்கின்றன. ஏனைய மதத்தினரை நோக்கி, ‘சாத்தான்கள்’ எனும் வாசகத்தை அவர்களின் காதுகளில் விழும் அளவுக்கு சொல்கின்றன.

இந்த நிகழ்வுகள், மத நல்லிணக்கத்தோடு இருக்கும் தமிழ் மக்களிடையே, பிளவுகளை ஏற்படுத்த நினைக்கும் அடிப்படைவாத சக்திகளுக்கு துணைபோகும் செயற்பாடுகளாகும். ஒவ்வொரு மனிதனும் தான் நம்பும் இறைவனை, மதவழிபாட்டை தேர்வு செய்யும் உரிமையுள்ளவன். அதில், யாரும் தலையிட முடியாது. அதுபோல, மற்றவர்களின் மத நம்பிக்கையையும் இழிவு செய்யாமல் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழர் தாயகத்தில் அண்மைய நாள்களில் மற்றைய மதத்தினரை கோபப்படுத்தும் வேலைகளில் புதிது புதிதாக வரும் கிறிஸ்தவ சபைகள் செய்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளையும் தமிழ் கட்சிகளோ, தலைவர்களோ கண்டும் காணாமல் இருப்பது என்பது, பாரதூரமான விளைவுகளை ஏற்படுவதற்கு துணைபோகும் செயற்பாடாகும்.

ஏற்கெனவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் காலம், தேர்தல் காலம் என்ற அளவில் தமிழர் அரசியல் சுருங்கிவிட்டது. இந்தக் காலங்களில் மாத்திரம் ஒவ்வொரு கட்சியும், தலைவர்களும் நாளைக்கே, தனிநாடு வாங்கிக் கொடுத்து விடப்போவது மாதிரியான வீராவேசமாகப் பேசுவார்கள்.

இந்தக் காலங்கள் முடிந்ததும், அந்தத் தலைவர்களையே காணக் கிடைக்காது. கொஞ்சமும் வியர்வை வழிந்துவிடாமல் இருந்து அரசியல் செய்ய வேண்டும்; அதன்மூலம் பதவி பெற்று சுகமாக காலத்தைக் கடத்திவிட வேண்டும் என்பதைத் தவிர, எந்த எண்ணத்தையும் தமிழர் அரசியலில் இருக்கும் எந்தத் தலைவரும் இப்போது வெளிப்படுத்துவதில்லை.

விடுதலைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தாக எந்தவொரு தலைவரிடமும் விடுதலை குறித்த இலக்கு இருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட தலைவர்கள் வாய்க்கப்பெற்ற கட்சிகளோ, அதன் தொண்டர்களோ கூட, உழைப்பும் வியர்வையும் இன்றி சுகமான வாழ்க்கைக்கான வழித்தடமாக, தேர்தல் அரசியலை நினைக்கிறார்கள். அதற்காக மாத்திரம், நாடகங்களை அவர்கள் ஆடியும் வருகிறார்கள்.

விடுதலை இலக்கு தொடர்பில் எந்தவொரு கட்சியோ, அதன் தலைவர்களோ இதுவரை ஏதாவது செயற்றிட்டத்தை மக்களிடம் முன்வைத்து இருக்கிறார்களாக என்றால், அது இல்லை. ஏன் குறைந்தபட்சம், அடுத்த தலைமுறையிடமாவது நேர்மையான அரசியலை கொண்டு சேர்க்க நினைக்கிறார்களா என்றால், அதுவும் இல்லை.

மாறாக, தங்களுக்கு அடிமை சேவகம் செய்வதற்கான குண்டர் கூட்டத்தை மட்டுமே கட்சி அரசியலுக்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு செயற்படுகிறார்கள்.
இப்படியான குறுகிய நோக்கங்களைக் கொண்டவர்களை, வெளிநாட்டுத் தூதரகங்களின் கடைநிலை அதிகாரி கூட, இலகுவாகக் கையாண்டு விடுகிறார்கள். அந்த அதிகாரியின் ஒரு தொலைபேசி அழைப்பையே, பெரிய விடயமாக இந்த அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். இப்படியான சிந்தனை கொண்ட தலைவர்களை வைத்துக் கொண்டு, இன விடுதலை பற்றிச் சிந்திப்பது எல்லாம் உண்மையில் மகா அபத்தமாகும்.

தமிழர் விடுதலைக்காக ஆயிரமாயிரம் உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அர்ப்பணிப்புகள் அர்த்தம்பெற வேண்டுமென்றால், குறைந்த பட்சம் தமிழ்த் தேசிய அரசியல் பதவி, பகட்டு, குழிப்பறிப்பு, சோரம்போகும் நிலை எனும் கட்டங்களுக்கு அப்பால் நின்று, செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

இல்லையென்றால், குருதி குடிக்கும் அட்டைகளிடம் மாட்டியது மாதிரி, தமிழ்த் தேசிய அரசியலும் அதன் ஆன்மாவை மெல்ல மெல்ல இழக்கும். அப்போது, எதிரிகளும் துரோகிகளும், இலகுவாக தமிழர் இன விடுதலை சிந்தனையை முழுவதுமாக சிதைத்துவிடுவார்கள்; பாரம்பரிய மண்ணில் தமிழ் மக்களின் இருப்பையும் இல்லாமலாக்கி விடுவார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.