;
Athirady Tamil News

கர்நாடகாவில் கலவரம் ஏற்படுத்த காங்கிரஸ் சதி- பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

0

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நேற்று 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சித்ரதுர்கா செல்லகெரே, விஜயநகரா மாவட்டத்தின் ஹொஸ்பேட் , ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் கூட்டங்களீல் பிரதமர் மோடி பங்கேற்றார். இரவு கலபுர்கியில் தங்கிய அவர் இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காலையில் தென்கன்னட மாவட்டத்தின் மூடபிதரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். இதற்காக மங்களூரு வந்த மோடியை விமான நிலையத்தில் பா.ஜ.க.வின் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த 25 தலைவர்கள் வரவேற்றனர். கூட்டத்தில் தட்சிண கன்னடா-உடுப்பியில் இருந்து 13 வேட்பாளர்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தொடக்கத்தில் கன்னட மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- கர்நாடகாவை மிகப்பெரிய உற்பத்தித் திறன் கொண்ட மாநிலமாக மாற்ற தீர்மானித்துள்ளோம்.பா.ஜ.க.வின் அனைத்து திட்டங்களையும் அழிக்கவே காங்கிரஸ் திட்டமிடுகிறது.

கல்வித் துறையில் தட்சிண கன்னடா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவை அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற செய்வோம். காங்கிரசுக்கு என்ன தேவை? காங்கிரஸ் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறது. காங்கிரஸ் அனைத்து திட்டங்களிலும் 85 சதவீதம் ஊழல் செய்தது. கர்நாடகாவின் எதிர்காலத்தை இளம் புதிய வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க இளம் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். இதை காங்கிரசால் செய்ய முடியாது. மாநிலத்தில் கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? மாநிலம் அழிக்கப்பட வேண்டுமா? சிந்தியுங்கள்.வளர்ச்சியை விரும்புபவர்கள் காங்கிரசை தூக்கி எறியுங்கள்.

காங்கிரஸின் இருண்ட பக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். பயங்கரவாதிகளை காக்க காங்கிரஸ் வீதியில் இறங்கும். இதனால் மாநிலத்தில் அமைதி ஏற்படாது. காங்கிரஸ் ரிவர்ஸ் கியரில் உள்ளது. தேசவிரோதிகள் மீது போடப்பட்ட வழக்குகளை காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது. முழு நாடும் நமது வீரர்களை மதிக்கிறது. ஆனால் காங்கிரஸ் ராணுவ வீரர்களை மதிப்பதில்லை. இது நமது ராணுவ வீரர்களை அவமதிக்கிறது. உலக அளவில் இந்தியாவின் புகழ் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. உங்கள் வாக்கு மூலம் இந்தியாவின் மரியாதை உலகளவில் அதிகரித்துள்ளது. உங்கள் வாக்கு மூலம் மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் புகழை அதிகரிக்க வேண்டுமானால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கர்நாடகம் கொண்டாடப்பட வேண்டுமெனில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். இந்த முறை பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்.காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு கழிப்பறை இல்லை, படிக்க பள்ளிகள் இல்லை. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது.பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணத்தில் பெரும்பாலானவை பெண் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. அதேபோன்று முத்ரா திட்டத்தில் பெண்கள் அதிக பயன் பெறுகின்றனர். குடிசைகளில் வாழும் பெண்கள் இன்று கோடீஸ்வரர்களாகி வருகிறார்கள். நாட்டின் குழந்தைகள் ஜி 20 பற்றி பேசுகிறார்கள். ஜி 20-ல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு வளர்ச்சி பற்றி சிந்திக்கவில்லை. இரட்டை என்ஜின் பா.ஜ.க.ஆட்சியில் வளர்ச்சியை பார்க்கிறீர்கள். வேகமான வளர்ச்சிக்கு பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். பா.ஜ.க. மீனவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. எனவே இம்முறை பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஒவ்வொரு மீனவரும் கூறி வருகின்றனர். உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா ஆகியவை வங்கித் துறைக்கு நிறைய பங்களித்துள்ளன. தற்போது மாநில இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். கர்நாடக இளைஞர்கள் விண்வெளியிலும் இந்தியக் கொடியை பறக்கவிட்டனர். இங்குள்ள இளைஞர்கள் ராக்கெட், செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளனர். இளைஞர்களுக்காக பா.ஜ.க, பல பணிகளை செய்து, இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இது இளம் ஸ்டார்ட்அப்களுக்கு அதிக வாய்ப்பை அளித்துள்ளது. ஸ்டார்ட்அப்களுக்கான கொள்கையை அமல்படுத்தியுள்ளோம். நாட்டில் அடல் டிங்கரிங் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.

இது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது ஸ்டார்ட்அப்களுக்கான நர்சரி வகுப்பு போன்றது. நாட்டின் பொருளாதாரம் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளது. நாடு வளர்ச்சி அடைகிறது என்று அர்த்தம். இதற்குக் காரணம் மோடி அரசால், நமக்கு முன்னால் இருந்த இங்கிலாந்தை விட்டுவிட்டு முன்னேறினோம். இப்போது 3வது இடத்திற்கு செல்ல உங்கள் ஆசிர்வாதம் தேவை. கர்நாடகாவின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. எனவே மே10 -ந் தேதி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.