சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடன் கடற்படை தளபதி சந்திப்பு: ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி!!
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரை இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் நேற்று சந்தித்தார்.சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு ஆசியாவில் பங்கேற்க 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் கடந்த திங்கள்கிழமை சிங்கப்பூர் வந்தார்.
முதல் நாளில், சிங்கப்பூரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கிரன்ஜி போர் நினைவிடத்தில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். நேற்று முன்தினம், கடல் பாதுகாப்பு படைத் தலைவர் அட்மிரல் ஆரோன் பெங்கை சந்தித்தார்.
இந்நிலையில், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென்னை நேற்று ஹரிகுமார் சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாள் ராணுவத் தரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர், அங்குள்ள முக்கிய கடற்படை தளத்தில் முதல் முறையாக நடைபெற்ற ஏசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியை தொடங்கி வைத்தார்.