பீகாரில் சாலை விபத்து: 3 சக்கர வாகனம் மீது லாரி மோதி 7 பேர் பலி- 4 பேர் படுகாயம்!!
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள மகோல்வா பகுதியில் கும்பலை ஏற்றிச் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் நேற்று மாலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கோர சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் சீதாமரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சீதாமர்ஹி போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறினார்.
மேலும், இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.