சரத்பவார் பதவி விலகல்: பரபரப்பு பின்னணி- புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம்!!
1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார். அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி நடந்தது. ஆனால் சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி, மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோனியாவுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு குரல் கொடுத்த சரத்பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர். காங்கிரசின் இந்த அதிரடியால், அதே ஆண்டு (1999) உருவானது தான் தேசியவாத காங்கிரஸ். சரத்பவார் இந்த புதிய கட்சியை உருவாக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அதே ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. காங்கிரசை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரி ஆனார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகன் புஜ்பால் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
சரத்பவார் மாநில அரசியலுக்கு திரும்பவில்லை. தொடர்ந்து அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பகையை மறந்து தேசிய அளவிலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். இந்தநிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்க்காத வகையில் 82 வயது சரத்பவார் நேற்று முன்தினம் அரசியல் வெடிகுண்டை தூக்கி போட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த விழாவில், தனது புதுப்பிக்கப்பட்ட சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டபோது, கட்சி நிர்வாகிகள் முகம் வாடியது. முடிவை திரும்ப பெறுமாறு அவரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மன்றாடி கேட்டனர்.
ஆனால், கட்சி தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும், நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்று கூறிய சரத்பவார் அரங்கை விட்டு வெளியேறி வீடு திரும்பினார். இருப்பினும் ஒய்.பி. சவான் அரங்கில் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அவர், “சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்துள்ளார். கட்சியை அவர் தொடர்ந்து வழிநடத்துவார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், கட்சியை சோனியா காந்தி தானே வழிநடத்துகிறார். அதே போல கட்சி சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்படும். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இருப்பினும் தொண்டர்கள் பலர் சரத்பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க தயாராக இல்லை.
4 முறை முதல்-மந்திரி பதவி, சுமார் 12 ஆண்டு காலம் மத்திய மந்திரி பதவி வகித்த சரத்பவார், தேசியவாத காங்கிரசை தொடங்கி 24 ஆண்டு காலம் கட்சியை திறம்பட நடத்தி வந்தவர். தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு ஒரு உதாரணமாக, சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தொண்டர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இவ்வாறு தொண்டர்கள் ஆக்ரோஷமாக இருக்க, சரத்பவார் அவரது முடிவில் இருந்து மாற மாட்டார் என்று கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அஜித்பவார் கூறுகையில், “நான் சரத்பவாரின் மனைவியிடம் பேசினேன். அப்போது சரத்பவார் அவரது முடிவை திரும்ப பெறமாட்டார் என்று அவர் கூறி விட்டார்” என்றார்.
தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க போவதாக சமீப நாட்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சரத்பவார் பதவி விலகல் தொடர்பான தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். 2019-ம் ஆண்டு பா.ஜனதா- சிவசேனா கூட்டணி முறிவை தொடர்ந்து, சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சரத்பவார் முயன்று கொண்டு இருந்தவேளையில், பா.ஜனதாவுடன் கைகோர்த்து அதிகாலையில் துணை முதல்-மந்திரி பதவி ஏற்று கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் தான் இந்த அஜித்பவார். எனவே அஜித்பவார் மீண்டும் பா.ஜனதா பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில் விரக்தி அடைந்து சரத்பவார் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சரத்பவாரின் இந்த திடீர் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முடிவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து திரைமறைவு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சரத்பவார் தனது முடிவை திரும்ப பெறாதபட்சத்தில் புதிய தலைவர் யார்? என்பது பற்றி ஆலோசிக்க தொடங்கி உள்ளனர். இதில் சிலரின் பெயர் அடிப்படுகிறது. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முன்னணியில் உள்ளார். அஜித்பவார், கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது. சுப்ரியா சுலே தான் தேசிய அரசியலுக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி சகன்புஜ்பால் நேற்று தனது கருத்தை பகிரங்கப்படுத்தினார்.
அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவரை மாநில அரசியலுடன் மட்டுப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சரத்பவாரின் ஒரே மகளான சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரியா சுலே தற்போது பாராளுமன்ற எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் மீண்டும் ஒருமுறை தனது முடிவை தெளிவுப்படுத்தும் போது, தேசியவாத காங்கிரசில் அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடையும்.