சத்தீஸ்கரில் லாரி மீது கார் மோதி 11 பேர் பலி!!
சத்தீஸ்கர் மாநிலம் தாம் தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்-பட்கான் கிராமத்தை சேர்ந்தவர்கள், கன்கேர் மாவட்டம் மார்க டோவா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் பலோட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் கார் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானது. இந்த விபத்தில் பலியானவர்களில் 5 பேர் பெண்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல்-மந்திரி பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.