மணிப்பூர் வன்முறை – போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு!!
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு ஆளுநர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.