ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம் செர்பியாவில் 8 பேர் சுட்டுக் கொலை!!
செர்பியாவில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாயினர். தலைநகர் பெல்கிரேடிலிருந்து 100 கிமீ தொலைவில் மால்டினோவா, டுபோனா ஆகிய கிராமங்கள் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு ஆயுதம் ஏந்திய ஒருவர் காரில் அமர்ந்து கொண்டு கிராம மக்கள் மீது சரமாரியாக சுட்டார். இதில் 8 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.
இதன் பின் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி கொலையில் தொடர்புடைய யுபி என்பவரை கைது செய்தனர். செர்பியா உள்துறை அமைச்சர் பிராட்டிஸ்லாவ் காஸிக் கூறுகையில்,‘‘இது ஒரு தீவிரவாத தாக்குதல்’’ என்றார். கடந்த புதனன்று பெல்கிரேட் நகரில் 13 வயது பள்ளி மாணவர் துப்பாக்கியால் சுட்டதில், 8 மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.