மணிப்பூர் வன்முறையில் 54 பேர் பலி – கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவம்!!
மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர். “கடந்த 12 மணி நேரங்களில் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கலவரக்காரர்கள் கட்டிடங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தினர்.
எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது,” என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர் என்று பல்வேறு தகவல்கள் மூலம் செய்திகள் வெளியாகி வந்த நிலையிலும், போலீசார் இவற்றை உறுதிப்படுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. கலவரத்தில் சிக்கிய பலர் ரிம்ஸ் மற்றும் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் ராணுவத்தினர் மணிப்பூர் முழுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரம் காரணமாக கடந்த புதன்கிழமையில் இருந்து இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.