36 ஆண்டு சேவைப்புரிந்த ஐஎன்எஸ் மகர் கப்பலுக்கு ஓய்வு!!
இந்திய கடற்படையின் மிகப் பழமையான தரையிறங்கும் கப்பலான ஐஎன்எஸ் மகர், 36 ஆண்டுகளாக நாட்டிற்கு அளித்த மதிப்புமிக்க சேவைக்குப் பிறகு நேற்று முதல் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்காக நேற்று கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் சிடிஆர் ஹேமந்த் வி சலுங்கே தலைமையில் ஐஎன்எஸ் மகர் கப்பல் சேவையில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த 2005-06ம் ஆண்டில் கப்பலுக்கு தலைமை தாங்கிய தென் கடற்படை கட்டளையின் துணை அட்மிரல் எம்.ஏ.ஹம்பிஹோலி தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டார்.
இந்த விழாவில் கப்பலின் காலவரிசை மற்றும் சிறப்பு அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது, இதில் ஆயுதப்படைகள், படைவீரர்கள் மற்றும் சிவில் நிர்வாகத்தின் மூத்த பணியாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். 1984ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று மீரா தஹிலியானியால் ஐஎன்எஸ் மகர் இயக்க தொடங்கப்பட்டது. 1987ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி அன்று கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்யார்ட் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட்டில் மறைந்த அட்மிரல் ஆர்.எச் தஹிலியானியால் இயக்கப்பட்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது. 2004ல் சுனாமிக்குப் பிறகு 1,300 க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றியதில் ஐஎன்எஸ் மகர் கப்பல் முக்கிய பங்கு வகித்தது.
இந்திய ராணுவத்துடன் பல கூட்டு ராணுவ பயிற்சிகளின் ஒரு பகுதியாக செயல்பட்டது. 2018ம் ஆண்டில், இதனை பயிற்சிக் கப்பலாக மாற்றப்பட்டு கொச்சியில் உள்ள முதல் பயிற்சிப் படையில் சேர்ந்தது. மேலும், கடந்த பிப்ரவரி 16 அன்று கொச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து ரத்த தான முகாம் உட்பட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் இந்த கப்பல் மூலம் நடத்தப்பட்டது.