நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு- வன்முறையால் மணிப்பூரில் தேர்வு ஒத்திவைப்பு!!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்காண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 7ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சுமார் 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இன்று தேர்வு நடப்பதை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3ம் தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த நுழைவு சீட்டில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுளள்து. நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவியருக்கும் இணையதளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இது தொடர்பான முழு விவரங்களும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த தேர்வில் கடுமையான கெடுபிடிகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் முன்னதாக ஒரு மணி நேரத்துக்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும்.
தமிழகம் பொறுத்தவரையில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் ஆவார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், வன்முறை காரணமாக மணிப்பூரில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்றும் தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.