கார் குண்டு வெடிப்பில் பிரபல எழுத்தாளர் பெர்லிபின் படுகாயம்- உக்ரைன், அமெரிக்காவை குற்றம்சாட்டும் ரஷியா!!
உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதற்கிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் நிஸ்னி நவ்கொரொட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. காரில் வெடிகுண்டு பொறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார். எழுத்தாளர் பெர்லிபின் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எழுத்தாளரை கொல்ல முயன்ற கார் வெடிகுண்டு சம்பவபத்திற்கு உக்ரைனையும் அமெரிக்காவையும் ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.