ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!!
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வான் வெளியில் தாறுமாறாக பறந்தது. உடனே அதில் பயணம் செய்த விமானி பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தார். உடனே அந்த விமானம் ஹனுமந்த் ஹார்க் அருகே பஹ்லோக்நகர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மேல் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது.
இதில் அந்த வீட்டின் அருகே இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விமானம் விழுந்ததில் அந்த வீடு முற்றிலும் தேசம் ஆனது. பாராசூட்டில் குதித்ததால் விமானி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சத்தம் கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். விபத்து குறித்து கேள்வி பட்டதும் போலீசாரும் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். விமானத்தின் சிதறிய பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் என்ன வென்று தெரிய வில்லை. விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.