சொந்தமாக தயாரித்த விமானத்தில் குடும்பத்துடன் உலகம் சுற்றும் என்ஜினீயர்!!
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது விமானிக்கான பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்றார். அதன்பின்பு அசோக்குக்கு சொந்தமாக விமானம் தயாரிக்க ஆசை ஏற்பட்டது. கொரோனா லாக்-டவுன் காலத்தில் விமானம் தயாரிக்கும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். இதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுரைகளை படித்து விமானம் தயாரிப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து அதனை தயாரிக்கும் பணியை தொடங்கினார். அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார். இதற்கு ஒரு கோடியே 26 லட்சம் செலவானது. விமான தயாரிப்பு முடிந்ததும் அதனை முறையான அனுமதி பெற்று ஓட்டி பார்த்தார். அதிலும் வெற்றி கிடைக்க அந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்தார். இதையடுத்து அந்த விமானத்திற்கு தனது மகள் தியாவின் பெயரை சூட்டினார். பின்னர் அசோக் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓய்வு நாட்களில் உலகம் சுற்ற தொடங்கினார். சொந்த காரில் சுற்றுலா செல்வது போல சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பறக்க தொடங்கினார்.
ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். பெரும் தொழில் அதிபர்கள் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துள்ள நிலையில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் சொந்தமாக அவரே விமானம் தயாரித்து அதில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.