27 வயசாகுது இன்னும் ஒரு கேர்ள் பிரண்டு இல்லை! 71 மீட்டர் புத்தரிடம் லவுட் ஸ்பீக்கரில் வேண்டிய இளைஞர்!!
71 மீட்டர் உயரம் கொண்ட புத்தரிடம் தனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேண்டும், 11 கோடி ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு சீனர் ஒருவர் ஸ்பீக்கர் மூலம் கத்தி வேண்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தில் உள்ளது 71 மீட்டர் உயரம் கொண்ட புத்தர் சிலை. இது டாங் அரசர்களால் கட்டப்பட்டது. உலகின் மிகவும் பெரிய புத்தர் சிலை என அறியப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இந்த நிலையில் சீனாவை சேர்ந்தவர் ஜாங். இவர் தனது வீட்டிலிருந்து 2000 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய புத்தர் சிலை அமைந்துள்ள சிசுவான் மாகாணத்திற்கு சென்றார். அங்கு ஏர்பாட் ஷேப்பில் உள்ள ஒரு ஸ்பீக்கரையும் அவர் கொண்டு சென்றார்.
அந்த ஸ்பீக்கரை வைத்து சொன்னால் புத்தருக்கு கேட்கும் என்பதால் அதை கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் அந்த ஸ்பீக்கரில் கத்தி பேசுகையில், எனக்கு 27 வயதாகிறது. எனக்கென்று சொந்த கார் கூட இல்லை, ஒரு வீடில்லை. இவ்வளவு ஏன் இந்த வயதில் கூட எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இல்லை. நான் பணக்காரர் ஆக வேண்டும் . அதற்காக நான் அதிகமாக பணம் கேட்கவில்லை. எனக்கென 10 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 11.81 கோடி) பணம் இருந்தால் போதுமானது. எனக்கு கேர்ள் பிரண்டு வேண்டும். அவர் அழகாக இருக்க வேண்டும். என்னை அளவுக்கு அதிகமாக காதலிக்க வேண்டும். என் 10 மில்லியன் யென்னை விட என்னைதான் அவர் அதிகமாக காதலிக்க வேண்டும். என் காதலி இளம் வயதினராக இருத்தல் வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
இந்த வேண்டுதல் நிறைவேற அவர் வார இறுதி நாட்களில் 12 மணி நேரம் செலவிட்டு வருவது என முடிவு செய்துள்ளார். இவர் இருக்கும் இடம் சீனாவின் கிழக்கு பகுதி. அங்கிருந்து தென்மேற்கு பகுதியான சிசுவான் 2000 கி.மீ. தூரமாகும். இந்த ஸ்பீக்கரை அவர் ஆன்லைனில் வாங்கினாராம். அதுவும் புத்தர் சிலையுடன் பொருந்தும் படியான நிறத்தில் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். மற்றவர்களை நம்பாமல் அவர் புத்தரைதானே நம்பினார் என ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். அது போல் இன்னொருத்தர் ஸ்பீக்கர் வாங்கிய நீங்கள், புத்தருக்கு இயர் போனும் வாங்கினீர்களா என கேட்டுள்ளார். உங்களது ஆசைகள் எல்லாம் புத்தருக்கு கேட்டதா இல்லையா என இன்னொருவர் கேட்டுள்ளார். இப்படியாக அவரை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். வேண்டுதல்களை மனதிற்குள் வேண்டினால்தான் பலிக்கும் என்றும் பிறரிடம் சொன்னால் பலிக்காது என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த இளைஞரோ லவுட் ஸ்பீக்கர் போட்டு கேட்டிருக்கிறார். அதிலும் ஸ்பீக்கரில் அதிகமாக சவுண்ட் வைத்தால்தான் புத்தருக்கு கேட்கும் என்றும் அப்போதுதான் தனது ஆசைகள் நிறைவேறும் என்பதற்காக அவர் அதிக சவுண்டை வைத்துள்ளார். கேர்ள் பிரண்டு வேண்டும் என கேட்டுள்ளதை 90 கிட்ஸ் நோட் பண்ணுங்கப்பா!