;
Athirady Tamil News

திருப்பதி கோவில் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை- தேவஸ்தானம் தகவல்!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோவிலுக்குள் மின்சார மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் குற்றமாகும். இந்தநிலையில் நேற்று முன்தினம் மர்மநபர் யாரோ கோவிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்கக் கோபுரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இது, பக்தர்கள் மற்றும் ஆன்மிக வட்டாரத்திலும், திருப்பதி தேவஸ்தானத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷம நபர்களின் இச்செயலுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி, ஏழுமலையான் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் எந்த மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. திருமலையில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி பக்தர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கக்கூடாது. கடந்த 7-ந்தேதி திருமலையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

அப்போது பக்தர் ஒருவர் விமான கோபுரத்தை பேனா கேமரா மூலம் வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எல்லா நெறிமுறைகளும் தெரிந்திருந்தும், அந்தப் பக்தர் மூலவர் தங்கக் கோபுரமான ஆனந்த நிலையம் விமானத்தை வீடியோ எடுத்து, நெறிமுறைகளை மீறி சமூக வலைதளங்களில் வைரலாகப் பதிவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அந்தத் தவறு செய்தவரைக் கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டியின் உத்தரவுப்படி, இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.