அமெரிக்காவில் வணிக வளாக துப்பாக்கி சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் பலி!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில் அமெரிக்க வணிக வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவர் கொல்லப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சரூர்நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஐஸ்வர்யா தனது தோழியுடன் வணிக வளாகத்துக்கு சென்றிருந்தபோது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி பலியானார். இதில் ஐஸ்வர்யாவின் தோழி காயங்களுடன் உயிர் தப்பினார். அமெரிக்க துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் என்ஜினீயர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஐஸ்வர்யாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.