கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர்- அபராதம் கட்ட சொன்னதால் கல்லூரி மாணவர் ஆத்திரம்!!
டெல்லியில் கடந்த வாரம் ஒரு வாலிபர் 3 கிலோ மீட்டர் தூரம் கார்பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தை உலுக்கி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்து வருபவர் கோவிந்த் வியாஸ். இவர் நேற்று மாலை ஜோத்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை ஓட்டியவர் போக்குவரத்து விதிகளை மீறி செல்போன் பேசிய படி வந்தார்.
இதை பார்த்த கோவிந்த் விகாஸ் அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினார். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போக்குவரத்து போலீஸ்காரர் சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மடக்கினார். காரில் இருந்தவரிடம் செல்போன் பேசியபடி கரை ஓட்டி வந்ததால் 500 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியபடி கார் முன்னால் சென்றார். ஆனால் டிரைவர் அபராதத்தை கட்டாமல் ஆத்திரத்தில் காரை எடுத்தார். செய்வது அறியாமல் தவித்த போலீஸ் காரர் கோவிந்த் விகாஸ் காரின் பேனட்டில் விழுந்தார். இதனால் சுமார் 500 மீட்டர் தூரம் அவர் கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்டார். இதில் அவருக்கு கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது செல்போனும் கீழே விழுந்து உடைந்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று போலீஸ்காரரை மீட்டனர். இது தொடர்பாக காரை ஓட்டி வந்தவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஓமராம் தேவசி என்பதும் கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து போலீஸ்காரர் கார் பேனட்டில் தொங்கியபடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.