ஜீவனை சந்தித்தார் கடம்பூர் ராஜு !!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை கொழும்பில் உள்ள அமைச்சகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
மரியாதை நிமித்தம் திங்கட்கிழமை (09) நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை – இந்திய சமூதாய பேரவையின் சார்பில் சிவராமன் மற்றும் காந்தி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் எடுத்துரைத்த அவர்கள், இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய தயாராக இருப்பதாக தமது விருப்பத்தை வெளியிட்டனர்.
இதற்கமைய செவ்வாய் (09), புதன்கிழமைகளில் (10) மலையக பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
மேற்படி குழுவினரால் மக்களுக்காக உதவி திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கான முழு ஒத்துழைப்பையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது தெரிவித்தார்.