;
Athirady Tamil News

பொறுமையை சோதிக்க வேண்டாம் !!

0

சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது என்றும் முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கங்கள் குடியேறுகின்றன என்றும் சிங்களவர்களின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

மேலும், தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என்பதை ஜனாதிபதி ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதற்கு வரலாற்று ரீதியிலான சான்றுகளாக பௌத்த தொல்பொருள் சின்னங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் பௌத்த மதத்துக்கும்,பௌத்த புராதன தனித்துவத்துக்கும் எதிராக திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். பௌத்த மதத்தை அழிக்கிறார்கள். ஆனால் சிங்களவர்கள் பிற மதங்களை அழிக்கவில்லை.

பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் திட்டமிட்டு பௌத்த மத வழிபாடுகளுக்கு பல்வேறு வழிகளில் தடையேற்படுத்துகிறார்கள். வெடுக்குநாறி பகுதியில் பௌத்த புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கங்கள் குடியேறியுள்ளன .

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் கொழும்பில் இந்துக்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்கள், தேர் இழுத்தார்கள், சிங்கள பௌத்தர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆகவே சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.