சரத்பவார் அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டார்: உத்தவ் சிவசேனா விமர்சனம்!!
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் சரத்பவார் அவரது அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில், ” சரத்பவார் தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உருவாக்கிய கமிட்டியில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு தாவ விருப்பம் உள்ள தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்று இருந்தது. கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த தலைவர்கள் சரத்பவார் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்ற முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்” என கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சரத்பவார் கூறியதாவது:- நாங்கள் புதிய தலைமையை உருவாக்கினோமா இல்லையா என்பது குறித்து சிலர் எழுதியதற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுக்க மாட்டோம். அது அவர்களின் எழுத்து. அதை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் செய்வது எங்களுக்கு தெரியும். அது எங்களுக்கு திருப்தியாக உள்ளது. நான் இணை மந்திரியாக இருந்து பின்னர் கேபினட் மந்திரியானேன். ஆனால் 1999-ம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நான் இளைஞர்களாக இருந்த ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், திலீப் வால்சே பாட்டீல், ஆர்.ஆர். பாட்டீலை கேபினட் மந்திகளாக ஆக்கினேன். அவர்களின் பணியை ஒட்டுமொத்த மராட்டியமும் பார்த்தது. இவ்வாறு அவர் கூறினார்.