சீனாவின் “மர்ம” ராக்கெட்.. 276 நாட்கள் வானில் சுற்றிய விண்கலம்.. திடீரென பறந்த சீக்ரெட் மிஷன்!!
விண்வெளி துறையில் தீவிர ஆய்வுகளைச் செய்து வரும் சீனா, இப்போது முக்கியமான மர்ம ராக்கெட் ஒன்றைச் சோதனை செய்துள்ளது. இந்த மர்ம ராக்கெட் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இப்போது சர்வதேச அளவில் விண்வெளி சார்ந்த ஆய்வுகளே தீவிரமாக நடந்து வருகிறது. உலகின் அனைத்து நாடுகளும் விண்வெளி துறையில் டாப் இடத்தை பிடிக்க வேண்டும் என்றே முயன்று வருகிறார்கள்.
விண்வெளி துறையைப் பொறுத்தவரை இப்போது அமெரிக்கா தான் டாப் இடத்தில் இருக்கிறது. முதல்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியவர்களும் அமெரிக்கா தான். இப்போதும் தொடர்ச்சியாக அவர்கள் பல ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.
தீவிர ஆய்வு: இப்போதும் கூட செவ்வாய்க் கிரகம் உள்ளிட்ட பல்வேறு கிரகங்கள் குறித்தும் ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். அதேநேரம் விண்வெளி துறையில் அமெரிக்காவை எப்படியாவது பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என்று பல உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகிறது. அதிலும் குறிப்பாகச் சீனா விண்வெளி துறையில் பெறும் தொகையைச் செலவு செய்து ஆய்வு நடத்தி வருகிறது. இதற்காக அவர்கள் பல ராக்கெட்களையும் விண்வெளிக்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே சீனா அனுப்பிய மர்ம ராக்கெட் சுமார் 276 நாட்கள் கழித்து பூமிக்குத் திரும்பியுள்ளது. சுமார் 9 மாதங்கள் விண்வெளியில் வட்டமடித்த இந்த ராக்கெட் இப்போது பூமிக்குத் திரும்பியுள்ளது.
சீனா: இந்த ராக்கெட் விண்வெளி துறையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும் இது பெரிய சாதனையைப் படைத்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ராக்கெட் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, அதில் என்ன தொழில்நுட்பத்தைச் சோதனை செய்தார்கள் என்பது குறித்தும் எதுவும் கூறவில்லை. மேலும், அந்த சாட்டிலைட் படங்களையும் அவர்கள் வெளியிடவில்லை.
ஆளில்லாத இந்த சாட்டிலைட் கடந்த திங்கள்கிழமை வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுகணை மையத்திற்குத் திரும்பியது. அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் அப்படியே விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் X-37B வகை விண்கலம் உள்ளது. இந்த ராக்கெட் தனது 6ஆவது பயணத்தில் 900 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு கடந்த நவ. மாதம் பூமிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒரு விண்கலத்தை உருவாக்கும் சீனாவின் முயற்சி இது என்றும் சிலர் கூறி வருகின்றனர். இப்போது விண்வெளி துறையில் ஒரு ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பரவலாகி வருகிறது. அந்த துறையில் சீனாவுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாக இது இருக்கிறது. இது விண்வெளி ஆய்வை செலவு குறைவானதாகவும் தொடர் ஆய்வுகளுக்கு ஏற்றதாகவும் மாற்றும்.
ஏன் முக்கியம்: முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டிலும் இதேபோல ஒரு ராக்கெட்டை சோதனை செய்தனர். அப்போது ராக்கெட் ஒரே நாளில் புறப்பட்டு மீண்டும் தரையிறங்கியது. இந்தச் சூழலில் இப்போது அடுத்த கட்டமாக விரிவான சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் இருந்துவிட்டு அந்த ராக்கெட் பூமிக்குத் திரும்பியுள்ளது. அடுத்தடுத்து விண்வெளி துறையில் சீனா முக்கிய ஆய்வுகளை நடத்த இது அடித்தளமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இது குறித்து வரும் நாட்களில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.