;
Athirady Tamil News

ஹஜ் செல்லவே காசில்ல.. பாகிஸ்தானை வதைக்கும் பொருளாதார நெருக்கடி! சவூதியிடம் திருப்பி அளித்த அரசு!!

0

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டில் பலர் ஹஜ் பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்காத காரணத்தால், நிதியை சேமிக்கும் வகையில் பயன்படுத்தப்படாத ஹஜ் இடங்களை சவூதி அரேபியாவிடமே திருப்பி வழங்கி இருக்கிறது அந்நாட்டு அரசு.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்றான ஹஜ், பொருளாதார வளம் கொண்டவர்களுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி, சவூதி அரேபிய அரசு உலக நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரைக்காக வரும் பயணிகளுக்கான கோட்டாவை ஒதுக்கி வருகிறது. ஒருநாட்டில் இருந்து எத்தனை யாத்திரிகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று சவூதி அரேபிய அரசு முடிவு செய்யும்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஹஜ் கோட்டாக்கள் உடனுக்குடன் நிரம்பி விடுவது வழக்கம். பாகிஸ்தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹஜ் இடங்களை அதிகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான கோட்டாக்களை அந்தந்த நாடுகளுக்கு சவூதி அரேபியா அரசு ஒதுக்கியது.

இதில் பாகிஸ்தானிற்கு ஒதுக்கப்பட்ட ஹஜ் கோட்டாவின்படி, இந்த ஆண்டு யாத்திரை செல்ல விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டின் மத விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால், வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஹஜ் இடங்கள் கூட முழுமையாக நிரம்பவில்லை.

பாகிஸ்தான் மக்கள் ஹஜ் யாத்திரைக்காக விண்ணப்பிக்காத 8,000 ஹஜ் இடங்களை சவூதி அரேபியாவிடமே திருப்பி அளித்து உள்ளது பாகிஸ்தான். இதன் மூலம் 24 மில்லியன் டாலர், அதாவது 679 கோடி பாகிஸ்தான் ரூபாயை அந்நாட்டு அரசு சேமித்து உள்ளது. இதை திருப்பி வழங்காமல் இருந்திருந்தால், இந்த தொகையை சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அரசு செலுத்த வேண்டி இருக்கும்.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பிரதமர் ஷாபாஸ் ஷரீப் தலைமையில் புதிய அரசு அமைந்தது. அன்றில் இருந்தே அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பணவீக்கம் கடுமையாக உயர்ந்து இருக்கிறது. விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இதன் காரணமாகவே மக்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கு கூட பணம் இல்லாமல் தவிப்பது தெரிகிறது.

அந்நாட்டின் ஆடை உற்பத்தி துறையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 70 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். தெற்கு ஆசியாவின் மிகவும் பலவீனமான பொருளாதாரமாக பாகிஸ்தான் பொருளாதாரம் தற்போது மாறி உள்ளது. உணவு தட்டுப்பாடு, வறுமை போன்றவற்றால் அந்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில், இதுவரை பாகிஸ்தான் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியாக இது பார்க்கப்படுகிறது.

உணவு தட்டுப்பாடு காரணமாக மாவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் ரேஷன் பொருட்கள் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களால் காக்கப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் சிந்து, பலோசிஸ்தான், கைபர் பக்துன்குவா உள்ளிட்ட மாகாணங்கள் இதில் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. மானிய விலை உணவு பைகளை பெற பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

அப்போது மக்களுக்கு இடையே மோதல்களும், கூட்ட நெரிசல்களால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் முஹம்மது இஷாக் தார் தெரிவிக்கையில், பாகிஸ்தான் மீண்டும் செழிப்பை தர இறைவனை பிரார்த்திக்கிறோம்.” என்று தெரிவித்து இருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.