பிபிசியில் சோதனை; நல்ல நண்பர்கள் கூட ஏற்க மாட்டார்கள்: இங்கிலாந்து தூதர் கருத்து!!
பிபிசியில் நடந்த சோதனையை நல்ல நண்பர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இங்கிலாந்து கருத்து தெரிவித்து உள்ளது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை தொடர்பு படுத்தி பிபிசி இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து நேற்று பிரிட்டிஷ் உயர் தூதரக அதிகாரி அலெக்ஸ் எல்லிஸ் கூறியதாவது:
பிபிசி நிறுவனத்தில் நடந்த சோதனையை நல்ல நண்பர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சில சமயங்களில் உடன்படாமல் இருப்பது பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன். அதுபற்றி இந்திய அதிகாரிகளுடன் எனது பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். பிபிசி உலகளவில் மதிக்கப்படும் நிறுவனம். அதன் செய்திகளை நான் தினமும் பயன்படுத்துகிறேன். இரண்டாவதாக, அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். பிபிசி இது குறித்து இந்திய அதிகாரிகளிடம் பேசி வருகிறது.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல் தீவிரவாதத்தின் அறிகுறி. இப்படிப்பட்ட தாக்குதல் எந்த நாட்டிலும் ஆபத்தாகும். இதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஒட்டுமொத்த தீவிரவாதம் எந்த நாட்டிலும் ஆபத்தானது. இந்த தாக்குதலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோபத்தை நாங்கள் முழுமையாக புரிந்துகொண்டோம். இங்குள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இதுபோன்று தாக்குதல் நடந்தால் நானும் இதே அளவு கோபத்தை வெளிப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.