தலசீமியாவைத் தடுப்பதில் தோல்வி!!
தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நாடுகள் தலசீமியாவைக் கட்டுப்படுத்திய போதிலும் இலங்கையால் இன்னும் தலசீமியாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என பேராசிரியர் சச்சித் மெத்தானந்தா கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், “உலகில் தலசீமியா அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. தலசீமியா அதிகம் உள்ள மற்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் கிரீஸ், இத்தாலி, சைப்ரஸ் போன்ற நாடுகளால் தலசீமியா நோயாளர்கள் உருவாகுவதை முற்றாகத் தடுக்க முடிந்துள்ளன.
நமது சுகாதார சேவைகள் மக்களை எளிதில் சென்றடைய முடியும். அப்படி இருந்தும் இந்த தலசீமியா நோயாளிகளின் பிறப்பை பத்தில் ஒரு பங்கு கூட நம்மால் தடுக்க முடியவில்லை.
இரண்டு தலசீமியா நோயாளர்களுக்கு இடையேயான திருமணத்தை நிறுத்துவதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.
தாம் தலசீமியா நோயாளர்களா இல்லையா என்பதை அனைவரும் திருமணத்திற்கு முன்பே கண்டுபிடிக்க வேண்டும்.
இலங்கையில் 3% பேர் தலசீமியா நோயாளர்களாக இருப்பது கண்டறியப்பட்டது. திருமணத்திற்கு முன் நீங்கள் தலசீமியா நோயாளியா என்பதைக் கண்டறியவும்.” என்றார்.