சின்னத் தேர்தல்: ரிட் மனு ஒத்திவைப்பு !!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீதான பரிசீலனையை செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை (11) உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரதாக்கல் செய்த குறித்த மனு,
நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன, ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.
அதன்போது, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், தேர்தலுக்கான திகதியை தமது சேவை பெறுநர் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று மன்றுக்கு அறியப்படுத்தினார்.
மேலும், திறைசேரியில் தேவையான நிதி உள்ளதா அல்லது இது குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றில், முதலில் வரும் விடயத்தின் அடிப்படையில் புதிய தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்தே, மனு ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முழு நாடும் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் பொது மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.