26 லட்சம் குடும்பங்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டம்- அசாம் அரசு அறிமுகம்!!
அசாம் மாநிலத்தில் பொது மக்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று ‘ஆயுஷ்மான் அசோம் – முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் பணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.
ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை திட்டத்தில், “முதல் கட்டமாக சுமார் 26 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கும் மற்றும் படிப்படியாக எண்ணிக்கை 32 லட்சமாக உயர்த்தப்படும்” என்று அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்ட தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஹிமந்த சர்மா கூறியதாவது:- சமூகத்தில் கடைசி நபரின் எழுச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் இடைவிடாத ‘அந்தியோதயா’ நாட்டமே ‘முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’க்கு ஊக்கமளிக்கும் காரணியாக அமைந்துள்ளது.
சில வரம்புகள் காரணமாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பல குடும்பங்கள் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ திட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டன. இது பணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வழி வழங்குகிறது. புதிய திட்டமானது, விடுபட்ட குடும்பங்களுக்கும் இதேபோன்ற பணமில்லா சுகாதாரப் பலன்களையும் உறுதி செய்யும். சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தனது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்று. ஆகஸ்ட் 15 முதல் அசாம் அரசு ஊழியர்களுக்கு ‘முக்யா மந்திரி லோக் சேவா ஆரோக்கிய யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.