நாமலுக்கு எதிரான வழக்கு : நினைவூட்டினார் நீதவான் !!
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனையை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (11) சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் அனுப்பியுள்ளது.
பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இன்னும் பெறவில்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து மேற்குறிப்பிட்ட நினைவூட்டல் பிறப்பிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணை செப்டம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாமல் ராஜபக்ஷ, சுதர்சன பண்டார கனேவத்த, நித்ய சேனானி, சுஜானி போகொல்லாகம மற்றும் இந்திக பிரபாத் கருணாஜீவ ஆகியோர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு என்ஆர் கன்சல்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாயும், கவர்ஸ் கோர்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட்டில் 30 மில்லியன் ரூபாயையும் மோசடி செய்தாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2013 மற்றும் 2014 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ்
கோர்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஊடாக, 30 மில்லியன் ரூபாயை பணச்சலவை
செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.