ஜப்பானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு !!
ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நிலநடுக்கம் எதிரொலியால் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டிடங்களில் சில லிஃப்ட்கள் ஐந்து மணி நேரம் வரை நிறுத்தப்பட்டன.
சிபா மற்றும் கனகாவா மாகாணங்களில் ஏழு பேர் லேசான காயம் அடைந்ததாக தீயணைப்புத் துறைகள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் வீட்டிலேயே விழுந்து காயமடைந்துள்ளனர். மேலும், ஒருவரின் தலையில் மின் விளக்கு விழுந்து படுகாயமடைந்துள்ளார்.