யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சீல்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வாங்கிய கொத்து றொட்டியினுள் பழுதடைந்த இறைச்சி காணப்பட்டதாக நபர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் கடையினை சோதனையிட்ட போது , பழுதடைந்த குளிர் சாதன பெட்டியினுள் சமைத்த , சமைக்காத கோழி இறைச்சி , மாட்டு இறைச்சி , ஆட்டு இறைச்சி என 45 கிலோ இறைச்சி மீட்கப்பட்டதுடன் , உணவகத்தின் பல சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதையும் அவதானித்துள்ளனர்.
அதனை அடுத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த உணவகத்திற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை அடுத்து , உணவகத்தினை உடனடியாக மூடி சீல் வைக்குமாறும் , மீட்கப்பட்ட 45 கிலோ இறைச்சியை அழிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.