சம்பளம் ரூ. 30 ஆயிரம் தான்.. இத்தனை கோடி மதிப்பில் சொத்துக்களா? ஷாக் ஆன அதிகாரிகள்!!!
மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு அலுவலர் வீட்டில் 5 முதல் 7 ஆடம்பர கார்கள் உள்பட மொத்தம் இருபது வாகனங்கள், 20 ஆயிரம் சதுர அடி நிலம், விலை உயர்ந்த இரண்டு டசன் கிர் இன மாடுகள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 98 இன்ச் டாப் எண்ட் டிவி மாடல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் சோதனையின் போது கண்டறிந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தின் வீட்டுவசதித்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார் 36 வயதான ஹேமா மீனா.
பணியில் சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊழல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஹேமாவின் வீட்டில் நடத்திய திடீர் ஆய்வின் போது, அவரின் வீட்டில் இருந்த கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட பொருட்களை கண்டு பிடித்தனர். இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை, மொபைல் ஜாமர்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் முதல் நாளிலேயே ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டறிந்தனர். இது ஹேமா வாங்கும் மாத சம்பளத்தை விட 232 சதவீதம் வரை அதிகம் ஆகும்.
ஹேமா முதலில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை தனது தந்தை பெயரில் வாங்கி, அதில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார். ஆடம்பர வீடு மட்டுமின்றி ரைசன் மற்றும் விதிஷா மாவட்டங்களிலும் நிலம் வைத்திருக்கிறார். முதற்கட்ட ஆய்வுகளின் படி இவர் வீட்டுவசதி வாரிய பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட பொருட்களை கொண்டு தனது வீட்டை கட்டியிருக்கிறார் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இத்துடன் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.