கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? குமாரசாமி ஆதரவை பெற பாஜக – காங்கிரஸ் தீவிர முயற்சி!!
கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
அதில் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் பெறும் வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரிந்துவிடும். நாளை மதியம் 12 மணி அளவில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதும் ஓரளவு தெரிந்துவிடும். கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குகள் சிதறியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறப்போவது யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக ஆதரவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சுமார் 20 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.
மேலும் பிரமாண்டமான சாலை ஊர்வலமும் மேற்கொண்டார். இது கர்நாடக அரசியலில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. தேர்தல் தினத்தன்று நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளிலும் இது எதிரொலித்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காது என்று தகவல்கள் வெளியானது. தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுவார்கள் என்றும் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக மாறுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு இருப்பதுபோல தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எத்தகைய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் ஓசையின்றி நடவடிக்கைகளில் குதித்துள்ளனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்காக அவர்கள் பேரம் பேசுவதிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது. அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் தேவேகவுடாவிடம் பேசியதாக தெரிய வந்துள்ளது.
பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தன்னை வலைபோட்டு மடக்க முயல்வதை அறிந்ததும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் இரவு அவசர அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். என்றாலும் வெளிநாட்டிலும் அவரை தொடர்பு கொண்டு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நாளை அவர் பெங்களூரு திரும்ப உள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவர்களில் ஒருவரான தன்வீர் அகமது தெரிவித்தார்.
என்றாலும் குமாரசாமி இந்த விவகாரத்தில் இதுவரை நேரடியாக பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன், மத சார்பற்ற ஜனதா தளம் ரகசிய உடன்பாடும், ஒப்பந்தமும் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குமாரசாமி ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஷோபா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாரதிய ஜனதா தனித்து ஆட்சி அமைக்கும்’ என்று கூறினார். அதுபோல காங்கிரஸ் கட்சியினரும், நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம். யார் தயவும் தேவை இல்லை என்று கூறியுள்ளனர்.