துருக்கியில் சோகம் – டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி!!
துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.