பாலியல் புகார் குறித்து விசாரணை குழு- மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!
கோவா பல்கலைக்கழக முன்னாள் துணை தலைவரான ஆரேலியானோ பெர்னாண்டஸ் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் (ஒழுங்குமுறை ஆணையம்) நடவடிக்கை எடுத்தது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் எதிர்கால வேலைவாய்ப்பில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பல்கலைக்கழக நிர்வாக கவுன்சிலின் இந்த உத்தரவுக்கு எதிராக பெர்னாண்டஸ் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:- பெர்னாண்டசுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விசாரணை நடைமுறையில் குறைபாடுகள் காணப்படுகிறது. இயற்கை நீதி கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளது. மும்பை ஐகோர்ட்டு உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அமைக்கப்படும் விசாரணை குழுக்களால் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. அரைகுறையாக அவர்கள் மேற்கொள்ளும் விசாரணையால் குற்றமற்ற ஊழியர் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013-ன் அமலாக்கத்தில் தீவிர குறைபாடுகள் நிலவுகிறது. மேற்கண்ட சட்டத்தின்படி அனைத்து அமைச்சகங்கள், துறைகள் அரசு அமைப்புகள், ஆணையகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நிர்வாக அமைப்புகள் உள்ளிட்டவற்றில் விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த குழுக்கள் அமைக்கப்படுவதால் மேற்கண்ட சட்டப்பிரிவுகள் கண்டிப்பதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.