கடலில் நடந்த ஆபரேசன் சமுத்திரகுப்தா: ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை மடக்கி பிடித்த கடற்படை வீரர்கள்!!
பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் உளவு துறை, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருள்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த வேட்டை சினிமா பாணியில் நடந்தது. அதாவது கடற்படையும், உளவு துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கடத்தல் காரர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில் போதை பொருளுடன் சென்ற கப்பலை அடையாளம் கண்டு துரத்தினர். அந்த கப்பல் நிற்காமல் செல்லவே சினிமா பாணியில் அதனை கடற்படையினர் துரத்தி சென்றனர்.
இதில் கடற்படையிடம் சிக்கிய கப்பலில் சுமார் 134 மூடைகளில் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடியாகும். அதனை பறிமுதல் செய்த கடற்படையினர், போதை பொருள் கடத்தல் தடுப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இந்த போதை பொருள் இந்தியாவுக்குள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை விசாரித்து வருகிறார்கள். கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு குழுவினர் இணைந்து உளவு துறையினர் அளித்த தகவலின் பேரில் நடத்திய ஆபரேசன் சமுத்திரகுப்தா வேட்டையில் மட்டும் இதுவரை சுமார் ரூ. 25 ஆயிரம் கோடிக்கு போதை பொருள் சிக்கியிருக்கும் என கூறப்படுகிறது.