காலடியில் மிதித்தால் சர்வாதிகாரம்: பா.ஜ.க. பிரமுகர் மீதான தாக்குதலுக்கு பவன் கல்யாண் கண்டனம்!!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டம், காவாலிக்கு வந்தார். அப்போது பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சரின் காரை மறிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. வெங்கட் ரமணா பா.ஜ.க. பிரமுகர் மொகராலா சுரேஷின் கழுத்தில் காலால் மிதித்து தாக்கினார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திராவில் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நேற்று டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் எதிர்ப்புக் குரல்களை அடக்கி, காலடியில் மிதித்தால் அது சர்வாதிகாரம். பா.ஜ.க. பிரமுகரிடம் காவல்துறை அதிகாரி நடந்து கொண்ட விதம் ஆட்சியாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிரான சுரேஷின் போராட்டத்திற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று கூறியுள்ளார்.