திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் திருக்கோட்டியூர் நம்பிகள் நட்சத்திர விழா !!
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் முக்கியத்துவம் பெற்ற இக்கோவிலில் ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தை உலகிற்கு உபதேசித்த ராமானுஜரின் குருநாதரான திருக்கோட்டியூர் நம்பிகளின் திருநட்சத்திர விழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு திருக்கோட்டியூர் நம்பிகள் தாயார் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யோகநரசிம்மர் அலங்காரத்திலும் திருக்கோட்டியூர் நம்பிகள் அருள்பாலித்தார்.
தொடர்ந்து பெருமாள் திருக்கோலம், ஆண்டாள் திருக்கோலம், மோகினி திருக்கோலம், பரமபதநாதன் திருக்கோலத்திலும், குதிரை வாகனம் மற்றும் சப்பரத்திலும், பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.