இம்ரான் கானின் வீட்டை சுற்றி வளைத்த பஞ்சாப் போலீஸ்: மீண்டும் கைதாவாரா?
லாகூரில் உள்ள வீட்டில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கும்படி இம்ரானுக்கு பஞ்சாப் மாகாண அரசு கெடு விதித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தோஷகானா ஊழல் வழக்கில் ஆஜராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வந்த போது, கடந்த 9ம் தேதி, துணை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியின் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் வரலாற்றில் இல்லாத வகையில், ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை சூறையாடிய தொண்டர்கள் லாகூரில் உள்ள கமாண்டரின் வீட்டிற்கு தீ வைத்தனர.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பஞ்சாப் மாகாண தகவல்துறை காபந்து அமைச்சர் ஆமீர் மிர், “லாகூரில் உள்ள இம்ரானின் ஜமன் பார்க் வீட்டில் தஞ்சமடைந்திருக்கும் 30-40 தீவிரவாதிகளை அவர் 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், பஞ்சாப் போலீசார் தனது வீட்டை சுற்றி வளைத்திருப்பதாகவும் தான் உடனடியாக மீண்டும் கைது செய்யப்பட உள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டரில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கும் போது எனது வீட்டின் வெளியே போலீசார் சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படும் வீடியோ என்ற பதிவுடன் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் சாலையில் பஞ்சாப் மாகாண போலீசார் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒலி எழுப்பியபடி விரைந்து செல்கின்றனர். மேலும், வாகனங்களில் இருந்து இறங்கிய போலீசார் கைகளில் தடுப்பு வேலிகளை சுமந்தபடி சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை விலக்கி கொண்டு ஓடும் காட்சி பதிவாகி உள்ளது.
* ராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், கடந்த 9ம் தேதி நடந்த ராவல்பிண்டி ராணுவ தலைமையகத்தை சூறையாடி, கமாண்டரின் வீட்டிற்கு தீவைத்த சம்பவத்தை ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் தனது கட்சியை தடை செய்ய இந்த வன்முறை சதி திட்டம் தீட்டப்பட்டதாக இம்ரான் கூறியுள்ளார்.