ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவதால் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை- வியாபாரிகள் பேட்டி!!
சிறு வியாபாரி புவனேஸ்வரி (கோடம்பாக்கம்):- நடுத்தர மக்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பணக்காரர்களிடம் மட்டுமே ரூ.2000 நோட்டு அதிகளவில் உள்ளது. அவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டும். இளநீர் வியாபாரி குமார் (கில் நகர்):- 2000 ரூபாய் நோட்டுகளை பார்த்தே 2 வருடங்கள் ஆகிறது. நோட்டுகள் அச்சடித்தது முதல் 2, 3 வருடங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. பிறகு அதை கருப்பு பணமாக முடக்கி வந்த காரணத்தினால் நடுத்தர மக்கள் பார்க்க கூட முடியவில்லை.
ஆட்டோ டிரைவர் கணேஷ் (சூளைமேடு):- உள்ளூர், வெளியூர் பயணிகள் யாரும் அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுகள் தருவதில்லை. ஆனால் இனி அடிக்கடி மீண்டும் 2000 ரூபாய் பணப் புழக்கத்தை பார்க்கலாம். கூலி தொழிலாளி ஜெகநாதன் (போரூர்):- வார சம்பளத்தில் ஒன்று, இரண்டு 2000 ரூபாய் தாள்கள் வரும் நிலையில் அதனை சில்லரையாக மாற்ற பெரும்பாடு பட வேண்டி உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக்கில் கூட சில்லரை தர மாட்டார்கள்.
இனி எங்கும் மாற்ற முடியாது. இனி அதனை கண்டால் பயம்தான் வரும். குடும்ப பெண் சித்ரா (போரூர்):- கொஞ்சம் கூட பணத்தை சேர்த்து வைக்க முடியல. வீட்டிற்கு கணவர் செலவுக்கு தரும் பணத்தில் மிச்சப்படுத்தி அதனை 500, 1000 ரூபாய்களாக மாற்றி வைத்து இருந்த நிலையில் திடீரென 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பு விடுத்து படாதபாடு பட்ட நிலைமையில் மீண்டும் சிறுக…சிறுக… சேர்த்து வைத்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.