ரூ. 2,000 நோட்டு வாபஸ் உத்தரவு எதிரொலி- தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!!
நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏற்கனவே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்தார். செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு ஆலோசனை கேட்டு அதிகளவில் அழைப்பு வருவதாக அகில இந்திய ஜெம் மற்றும் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் சயாம் மெஹ்ரா தெரிவித்தார். இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவாக, நான்கு மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி நேரம் வழங்கியுள்ளதால் பெரிய அளவில் நகைகள் வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.