இ.தொ.காவின் மீது பாய்ந்தார் வேலுகுமார்!!
இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம்” என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு பாராபட்சங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலைமைக்கு இ.தொ.க வின் அரைநூற்றாண்டுக்கு மேலான சுயலாப அரசியல் நடவடிக்கைகளே காரணமாகும்.
இன்றும் மலையகத்தின் தோட்டங்களில் வேலைசெய்கின்றவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடையாது. தோட்டங்களில் குடியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடையாது. அன்றாட உணவுக்கே கையேந்தும் நிலையே உள்ளது. குடியிருப்புகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகள். ஒரு லயன் அறையில் பல குடும்பங்கள். சுத்தமான தண்ணீர் வசதியில்லை. சுகாதார, போக்குவரத்து வசதியில்லை. நிர்வாகங்களின் அடாவடித்தனமான செயற்பாடுகள், குடும்பத்தில் ஒருவராவது தோட்டத்தில் வேலை செய்யாவிட்டால் குடியிருப்பை பறிக்கும் நிலை என மக்களின் நிலைமை பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலைமைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டது எவ்வாறு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் போது நாம் விரும்பாவிட்டாலும் பேச வேண்டிய தரப்பொன்று உள்ளது. எமது மக்களின் தொழிற்சங்க மற்றும் அரசியல் பலம் அரைநூற்றாண்டுக்கு மேல் இ.தொ.க விடமே இருந்திருக்கின்றது. ஆனால் தோட்ட முகாமைத்துவ முறையை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடிமை கூலி முறையை மாற்றவும் முயற்சி செய்யவில்லை. லயன் அறைக்கு பதிலாக லயன் அரை அமைப்பதே குடியிருப்புக்கான தீர்வாக முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்தும் தொடர்ந்து மக்களை தோட்டங்களில் கூலிகளாக, அடிமைகளாக வைத்திருக்கும் எண்ணப்பாடு கொண்ட செயற்பாடுகளாகும். அதன் மூலம் தமது தொழிற்சங்க அரசியல் சுயலாபங்களை நிறைவேற்றிக்கொண்டனர்.
இன்று இவ் அனைத்து பிரச்சினைகளுமே மக்களை இவ்வாறான அவல நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றது. எமக்கு கிடைத்த ஒரே சந்தர்ப்பத்தில், குறுகிய காலத்தில், பல மாற்றங்களை நாம் முன்னெடுத்தோம். லயன்களை அகற்றி தனி வீடுகளை அமைக்க 7 பேர்ச்சஸ் நிலம் பெற்றுக்கொடுத்தோம்.
இம் மாவில தோட்டத்திலும் பல குடும்பங்களுக்கு 7 பேர்ச்சஸ் காணி துண்டு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதை அன்று விரும்பாதவர்கள் 7 பேர்ச் போதாது, நாங்கள் 10 பேர்ச் தருகின்றோம் என்றார்கள். வாக்குறுதியளித்து வாக்குகளையும் பெற்றார்கள். இன்று என்ன நடந்திருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் கொடுத்த 7 பேர்ச்சஸ் நிலத்தையே மீள பறிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதனையும் நாங்களே மீள போராடி பெற்றுக்கொடுத்துள்ளோம். எனவே எமது மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு நாமெடுக்கும் முயற்சியை இனியும் தமது சுயலாப அரசியல் நோக்கில் குழப்பாது இருந்தாலே போதும் என்பதையே நாம் அவர்களுக்கு சொல்லவேண்டியுள்ளது.