ஜி20 கூட்டம் இன்று தொடக்கம்- காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!!
உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும்.
உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள். ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.