அம்பலமான மோசடிகள் – பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!!!
பிரித்தானியாவில் பணி புரிவதற்காக பெரும்தொகையான பணத்தை செலவு செய்து பிரித்தானியா சென்ற இலங்கைத் தமிழர்கள் சிலர், தாங்கள் மோசடி ஒன்றில் சிக்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு பிரவேசித்த புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா முயற்சிகள் எடுத்து வந்தது.
இந்த நிலையில், தற்போது சட்ட ரீதியாக பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் நபர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இதேவேளை, வேறொரு விதத்தில் பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைவது குறித்த விடயத்தை, பிரித்தானிய ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளன.
சட்டப்படி பிரித்தானியாவுக்கு வரும் புலம்பெயர்வோர், மோசடி ஒன்றிற்கு உள்ளாகியுள்ள விவகாரத்தை பிரித்தானிய ஊடகங்கள் சில வெளிப்படுத்தியதால், மேலும் சில சிக்கல் நிலைமைகள் உருவாகக்கூடும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
ராதா என்னும் இலங்கைத் தமிழர் ஒருவர், பல தலைமுறைகளாக இருந்த தனது சொத்துக்களை விற்று, முகவர் ஒருவருக்கு 50,000 பவுண்டுகள் செலுத்தி பிரித்தானியா செல்ல ஆயத்தமாகியுள்ளார்.
அவர் விமான நிலையத்திற்கு அடைந்தவுடன், அந்த முகவர் ஒரு பெண்ணை அவருடன் அனுப்பியுள்ளதுடன், அவருடன் சேர்த்து ஹிந்துஜன் என்னும் ஒரு சிறுவனும் அனுப்பப்பட்டுள்ளான்.
அந்த முகவர் ராதாவிடம், குறித்த பெண்ணை உங்கள் மனைவி என்றும், ஹிந்துஜனை உங்கள் மகன் என்றும் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
மறுத்தால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டப்பட்டதால், விமான பயணத்திற்கான நேரமும் நெருங்க, வேறு வழியில்லாமல், யாரோ ஒரு பெண்ணை தனது மனைவியாகவும், வேறு ஒரு சிறுவனை தனது மகன் எனவும் கூறி பயணிக்க நேர்ந்ததாக ராதா தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பலர், தமக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில், வேறு சிலரை தங்கள் குடும்பத்தினர் என்று கூறி பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்கள்.
தங்களுக்குத் தெரியாமல் தங்களை கடத்தல்காரர்களாக பயன்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியா தனது பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக அறிமுகம் செய்த திறன்மிகு பணியாளர் விசாவைப் பயன்படுத்தி சிலர் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புவது தெரியவந்துள்ளது.
இதனால் சட்டப்படி புலம்பெயர்வோருக்கும் இனி சிக்கல்கள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
பிரித்தானிய ஊடகங்களும், இப்படி சட்டப்படியான விசாவைப் பயன்படுத்தி மோசடி செய்து புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு அனுப்பும் கும்பல்கள் குறித்து தீவிரமாக செய்தி சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
குறித்த விடயங்களால் கட்டுப்பாடுகள் மேலும் கடினமாகலாம் எனும் அச்சம் உருவாகியுள்ளது.