உக்ரைன் ரஷ்ய போரில் பின்வாங்கும் அமெரிக்கா..!
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் போரில் பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்தாலும், நேரடியாக ரஷ்யா மீது கைவைக்க அவை அஞ்சுகின்றன என்று கூறலாம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பல நாடுகளின் ஆதரவை நாடியது.
ஆயுதங்கள் முதல் பல்வேறு உதவிகள் கோரியது. ஆனால், ஜேர்மனி போன்ற சில நாடுகள் வெளிப்படையாக உக்ரைனுக்கு ஆதரவளிக்க மிகவும் தயக்கம் காட்டின.
உக்ரைனுக்கு உதவுவது ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்று கூறி ஜேர்மனி அமைதி காத்தது.
சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த புடினுடைய இரகசிய காதலி மீது கூட தடைகள் விதிக்க நாடுகள் தயங்கின.
இந்நிலையில் நேற்று முன்தினம், உக்ரைன் ரஷ்ய எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான Belgorod தாக்குதலுக்குள்ளானது.
குறித்த தாக்குதல் விடயம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது குற்றம் சாட்ட, உக்ரைனோ புடினுக்கு எதிரான ரஷ்யக் குழுக்கள்தான் அந்த தாக்குதலுக்கு காரணம் என்று கூறியுள்ளது.
இதற்கிடையில், அந்த தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பான வாகனங்களும் பங்கேற்றதற்கு அடையாளமாக, அந்த வாகனங்கள் விழுந்து கிடப்பதைக் காட்டும் புகைப்படங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
உடனே, தாங்கள் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவதை ஊக்குவிப்பதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் விடயத்தின் உண்மைத்தன்மையில் சந்தேகம் இருப்பதாக அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் போரை எப்படி நடத்துவது என்பதைத் தீர்மானிப்பது உக்ரைனுடைய கையில் உள்ளது என்றும் கூறியுள்ளார் அவர்.