இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம்- புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மோடி உரை!!
புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன்பின்னர் பாராளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.
அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்த நேரத்தில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும். இது வெறும் கட்டிடம் மட்டுமல்ல 140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்கும் இடம். மே 28ஆம் தேதி வரலாற்றில் எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது. புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது திறமை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் கவுவரமாக உணர்கின்றனர்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பழமை மற்றும் புதுமைகளை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும். இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டிற்கு வழங்கப்படும் பரிசு. இது நமது ஜனநாயகத்தின் கோயில், வார்த்தைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தான் பாராளுமன்றம். இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம். இது இந்தியாவின் வளர்ச்சியை மட்டுமல்ல உலகின் வளர்ச்சியையும் பறைசாற்றுகிறது. இன்றைய தினம் புனித செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதி, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றை பிரதிபலிக்கும். செங்கோலை மிகுந்த மதிப்போடு வணங்குகிறேன். செங்கோலின் கௌரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம். சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது.
செங்கோலை வழங்கிய ஆதீனங்களின் முன்பு நான் தலை வணங்குகிறேன். இந்தியா ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் தான் நமது சின்னம். நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காக்கவேண்டும். முயற்சியை தொடரும்போது முன்னேற்றமும் தொடரும். 75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.