ராட்சத குடிநீர் குழாய் வெடித்து 10 அடி ஆழத்துக்கு பள்ளம்- குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது!!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ராஜவீதி பகுதி சாலையில் ஓரத்தில் மண்ணுக்கு அடியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு இந்த குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதி வரை செல்கிறது. ஆங்காங்கே துளையிட்டு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ஏற்றி, அதன் பிறகு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ராஜவீதி பகுதி உள்ள சாலையில் குடிநீர் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 10 அடி ஆழத்துக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் அழுத்தம் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய் வெடித்ததில் தண்ணீர் அப்பகுதி முழுவதும் ஆறாக சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியமாக மாறிவிட்டன. இது பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அதிகாரிகள், மோட்டாரை நிறுத்தி, குழாயில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து, பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பொது மக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். குடிநீர் குழாய் வெடித்த வழி தடப் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் மோட்டார் கொண்டு வரப்பட்டு குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து சகஜமான நிலை ஏற்பட்டது.