3 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை!!
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வருகிறார்கள். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த அமைப்புகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
குறிப்பாக தென்கன்னட பகுதியில் மங்களூரு மற்றும் புதூர், பெல்டங்காடி, உப்பினங்காடி, வெனுர், பன்டேவால் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த ஆஸ்பத்திரிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல கேரளா மாநிலத்தில் மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இதுபோல பீகார் மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பீகார், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த இச்சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.