இந்திய மல்யுத்த அமைப்புக்கு உலக கூட்டமைப்பு எச்சரிக்கை!!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்(டபிள்யூஎப்ஐ) தலைவரால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட விதத்துக்கு உலக கூட்டமைப்பான உலக மல்யுத்த ஒன்றியம்(யுடபிள்யூடபிள்யூ) கவலை தெரிவித்ததுடன், இந்திய கூட்டமைப்புக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது குறித்து டபிள்யூஎப்ஐக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்:
இந்தியாவில் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் குறித்து கவலையுடன் கவனித்து வருகிறோம். வீராங்கனைகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான, சுயசார்பற்ற விசாரணை நேர்மையாக நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துகிறோம். மேலும் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் கைது செய்யப்பட்ட விதத்தையும், அவர்கள் காவலில் வைக்கப்பட்ட செயலையும் கண்டிக்கிறோம். டபிள்யூஎப்ஐ அமைப்பின் தற்காலிக நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்காக 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த எச்சரிக்கையை மீறினால் இந்திய கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். கூடவே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் (இந்திய ெகாடிக்கு பதிலாக) நடுநிலை கொடியின் கீழ் பங்கேற்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் இந்திய மல்யுத்தகாரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், அதற்கு தீர்வு காணவும் அவர்களுக்கு யுடபிள்யூடபிள்யூ எப்போதும் ஆதரவாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும்(ஐஒசி) இதுப்போன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.