வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொலை; மற்றொரு சாரதிக்கு தூக்குத் தண்டனை- மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!!
முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு தூக்குத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
இரண்டாவது எதிரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து விடுதலை செய்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2013ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இதன் பின் அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
மறுநாள் 29ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் ரயில் கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த சடலம் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றும் குருதிக்கறையுடன் காணப்படுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் சுருக்கமுறையற்ற முறையில் நடைபெற்று கட்டுக்காவலில் இருந்து இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2018ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கரவண்டியில் பெறப்பட்ட குருதி மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் குருதி மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோவதை தடவியல் பொலிஸார் மன்றில் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர். அத்துடன், வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி மன்றில் நிபுணத்துவ சாட்சியமளித்தார்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் சாட்சிகளினால் நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்படுகிறார்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த மன்று, ஜனாதிபதி தீர்மானிக்கும் தினத்தில் – இடத்தில் அவரது உடலிலிருந்து உயிர் பிரியும் வரை தூக்கிலிடப்படவேண்டும் என்று கட்டளையிட்டது.
இந்த வழக்கை வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதிகள் தர்ஷிகா திருக்குமரநாதன், ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.