அமெரிக்க பொருளாதாரத்திற்கு கிட்டிய நல்ல செய்தி !!
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை அதிகரிக்கும் பிரேரணைக்கு குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடன் உச்ச வரம்பை அதிகரிப்பதற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை அதிகரிக்கும் பிரேரணை தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் அது அமெரிக்கா பொருளாதாரத்திற்கு மாத்திரமன்றி உலகப் பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து இது தொடர்பான பிரேரணை மீது நேற்றிரவு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 314 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தப் பிரேரணையானது ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இந்தப் பிரேரணை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமை, அமெரிக்க மக்களுக்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு சிறந்த செய்தி என ஜோ பைடன் கூறியுள்ளார்.
அத்துடன் முடிந்தவரை விரைவாக அமெரிக்க செனட் சபையும் இந்தப் பிரேரணையை நிறைவேற்றும் பட்சத்தில் தாம் அதில் கையெழுத்திட்டு சட்டமாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு விடயத்தில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, குடியரசு கட்சிக்குள் பிளவுகளை எதிர்கொண்டுள்ளார்.
அதிபர் ஜோ பைடனின் குடியரசுக் கட்சியினருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுக்களை அடுத்து கடன் உச்ச வரம்பு தொடர்பாக உடன்படிக்கை எட்டப்பட்டமை குறித்து தீவிர வலதுசாரி குடியரசு கட்சியினர் விமர்சித்திருந்தனர்.
தாம் எதிர்பார்த்ததை போன்று போதுமான அளவு செலவீனக் குறைப்புகள் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது கடன் உச்ச வரம்பு அதிகரிப்புக்கு பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.